Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு
Movie Updates

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு

96

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் இசை வெளியானது.

:தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், ” ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.‌ என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது..‌ ‘உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது.

‘ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்’ என மிக சுருக்கமாக ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதையை இயக்கவில்லை.‌ ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.

இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ”

இயக்குநர் சுமன் – அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார்.‌ அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..’காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..’ என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம்.‌ அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது.‌ இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் ‘ரகு தாத்தா’. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அருகே வா..’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.

ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது.‌ அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார்.‌ படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts